ஆச்சர்யப்பட வைக்கும் கியூபாவின் வரலாறு..!


கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரத் தடையையும் நேர்முக, மறைமுகத் தொல்லைகளையும் எதிர்த்து போராடி வரும் ஒரு குட்டி தீவு தான் கியூபா நாடு.


கிறிஸ்டோபர் கொலம்பஸ் இந்தியாவுக்கு வழி கண்டுபிடிப்பதாக கிளம்பி 1492இல் கியூபாவில் வந்திறங்கினார். போப்பாண்டவர் இத்தீவில் வாழும் டைனோ இன மக்களை கத்தோலிக்க கிறிஸ்துவராக மாற்ற மற்றும் ஆட்சி செய்ய ஸ்பெயினுக்கு அனுமதி கொடுத்ததால், இது ஸ்பெயின் பேரரசின் காலனியாக மாறியது.


ஸ்பெயின் நாட்டு மக்களை கியூபாவின் டைனோ மக்கள் எதிர்த்தாலும், ஸ்பெயினிலிருந்து வந்த பெரியம்மை போன்ற நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி இல்லாததால் பல லட்சக்கணக்கான மக்களாக வாழ்ந்து வந்த டைனோ மக்கள் வெறும் 500 பேராக குறைந்துவிட்டனர். மேலும் ஸ்பெயின் பேரரசு டைனோ மக்களை சண்டையிட்டுத் தோற்கடித்தது.
பல கியூபா மக்கள் வதை முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

1898இல் ஸ்பெயின் பேரரசிற்கும் அமெரிக்க நாட்டிற்குமிடையே போர் மூண்டது. அப்போது போரில் எளிதாக வென்ற அமெரிக்கா, தனது ஆதரவு பெற்ற ஆட்சியாளர்களை கியூபா நாட்டிற்கு தலைமையாக நியமித்தது.

கியூபாவின் பொருளாதாரத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த அமெரிக்கா, வர்த்தகங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது.
1952இல் அமெரிக்க ஆதரவுடன் ஃபுல்ஜென்சியோ படிஸ்டா இரண்டாவது முறையாக  ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அப்போது பிடல் காஸ்ட்ரோ என்ற ஒரு 33 வயது இளைஞன் படிஸ்டாவின் ஆட்சி ஊழலை எதிர்த்துப் போராட ஆரம்பித்தான்.
26 ஜூலை 1953இல் மோன்காடோ என்ற ஒரு இராணுவ கொட்டகையை (Moncado barracks) சிலருடன் சேர்ந்து தாக்கினார். இதில் பிடல் மற்றும் அவருடைய கூட்டாளிகள் எளிதாக தோற்கடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

பல நாட்டு தலைவர்களின் நெருக்கடியால் இரண்டு வருடங்களுக்கு  பின் விடுதலை செய்யப்பட்ட பிடல், மெக்ஸிகோ நாட்டிற்கு சென்றார். அங்கு அர்ஜென்டினாவை சேர்ந்த எர்னஸ்டோ சே குவேரா என்ற மருத்துவம் படித்த இளைஞனை சந்தித்தார். அவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டு கியூபா மீது மீண்டும் படையெடுக்க முடிவு செய்தனர்.

1956இல் Granma என்ற ஒரு சிறு கப்பலில் தன் தம்பி ராவுல் காஸ்ட்ரோ, எர்னஸ்டோ சே குவேராவுடன் சேர்ந்து 82 பேருடன் கியூபாவை கடல் மார்க்கமாக தாக்கினர். மீண்டும் படிஸ்டாவின் படைகள் காஸ்ட்ரோ மற்றும் அவர் கூட்டாளிகளை எளிதில் தோற்கடித்தது.

ஆனால் பிடல், ராவுல் காஸ்ட்ரோ, எர்னஸ்டோ சே குவேராவுடன் சேர்ந்து 12 பேர் தப்பி அருகிலுள்ள சியரா மாஸ்ட்ரா என்ற மலைப் பகுதிக்குள் தஞ்சம் புகுந்தனர். அங்கிருந்து கொரில்லாப் போராட்டம் நிகழ்த்தினர்.

1959இல் பிடல் காஸ்ட்ரோவின் படைகள் படிஸ்டாவின் ராணுவத்தை வென்றது. பிடல் மற்றும் நண்பர்கள் வெற்றிகரமாக கியூபாவின் தலைநகருக்குள் நுழைந்தனர். படிஸ்டா ஸ்பெயின் நாட்டில் தஞ்சமடைந்தார்.

சில ஜனாதிபதிகள் வந்து போனாலும் 1976இல் பிடல் காஸ்ட்ரோ ஜனாதிபதியானார். 2008 வரை அவரே சர்வாதிகார ஜனாதிபதியாக இருந்தார். அவரிடம் சில காலம் மந்திரியாக இருந்த சே குவேரா பின்னர் சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று அமெரிக்கா ஆதரவு படைகளுக்கு எதிராக போர் செய்து 1967இல் உயிரிழந்தார்.

பிடல் காஸ்ட்ரோ கம்யூனிஸ்ட் ஆட்சி முறை செய்தார். அமெரிக்காவின் எதிரியான சோவியத் யூனியனுக்கு காஸ்ட்ரோ நெருங்கிய நண்பரானார். அவர் ஆட்சிக்கு வந்தபின் அமெரிக்காவுக்கு சாதகமாக இருந்த அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்து கியூபாவிலிருந்த அமெரிக்க நிறுவனங்களை தேசியமயமாக்கினார். அதனால் அமெரிக்கா அவரை ஜென்ம விரோதியாக பார்த்தது.


தனக்கு அருகாமையில் இருக்கும் ஒரு குட்டிநாடு, நமக்கு அடிபணியாமல் கம்யூனிஸம் பேசிக் கொண்டிருக்கிறதே?' என்று பொருமிய அமெரிக்கா, கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க ஆரம்பித்தது.

ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருளில் 10 சதவீதம் அமெரிக்க உதிரிபாகங்கள் இருந்தால்  அப்பொருள் கியூபாவிற்கு அனுப்பப்படக் கூடாது உள்ளிட்ட பல தடைகளை விதித்ததோடு, பிடலை கொலை செய்வதற்கான பல்வேறு சதிச்செயல்களையும் செய்து வந்தது.

ரஷ்யாவை தவிர அமெரிக்காவிற்கு பயந்த உலகநாடுகள் பலவும், பெரும் சோதனையில் தத்தளித்த கியூபாவிற்கு உதவ மறுத்தன.
அதேசமயம் கம்யூனிச ஆட்சி செய்த சில தவறுகளாலும் கியூபாவின் பொருளாதாரம் பெருமளவிற்கு சரிந்தது. இதனை பிடலும் பொதுமக்களிடம் ஒப்புக்கொண்டார்.

அதன்பிறகு வேளாண்முறையில் மாற்றம் செய்தது மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களை அரசுடைமையாக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

உள்நாட்டு வளர்ச்சிக்காக, மிகச் சரியான திட்டமிடலை மேற்கொண்டார்.  தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் கல்லூரி நிலையங்கள் எதுவுமே இல்லாத நாடு கியூபா. 6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி. நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை. 12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என வல்லரசு நாடுகளில் பார்க்க முடியாதவை கூட கியூபாவில் உள்ளது.

அங்கு வசிக்கும் சாதாரண மக்கள் கூட அரசியல் குறித்த அதிக புரிதல் கொண்டவர்கள். கியூபாவின் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். அவர்கள் அனைவருக்கும் ஆண்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுகிறது.

ஒருவர் தன்னை, மற்றவர்களை விட வசதிபடைத்தவராக காட்டிக் கொள்வது அங்கு அவமானத்திற்குரியதாக கருதப்படுகிறது.

அங்கு ஒருவர் கூட வீடற்றவராக இல்லை. வீட்டு கடன்களுக்கு வட்டி கிடையாது என அடுக்கிக்கொண்டே போகும் அளவிற்கு கியூபா பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

உலகெங்கிலும் கொரோனாவை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் நிலையில், தனக்கு உதவ மறுத்த அனைத்து நாடுகளுக்கும் தற்போது கியூபா தனது நாட்டு மருத்துவர்களை அனுப்பி உதவி செய்து வருகிறது.

இதேபோன்று தான் அமெரிக்க தன் மீது பல பொருளாதடைகளை விதித்திருந்தாலும், பல நேரங்களில் அமெரிக்க மக்களுக்கு உதவ கியூபா முன்வந்துள்ளது. ஆனால் அதனை அமெரிக்க நிராகரித்து வருவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

Comments