நூற்றாண்டின் மிகப் பெரிய பெண் உளவாளிக்கு கடைசியில் கிடைத்த மரண தண்டனை..!

1876 இல் வடக்கு ஹாலந்தில் ஒரு சிறிய நகரத்தில் பிறந்த மார்கரெதா ஜெல்லே (Margaretha Geertruida), தனது  தந்தைக்கு மிகவும் பிடித்த மகளாக வளர்த்துள்ளார். இருந்தபோதிலும், 1889 ஆம் ஆண்டில், மார்கரேதாவின் தந்தை குடும்பத்தை கைவிட்டு மற்றொரு பெண்ணுடன் ஓடிவிட்டார். அவரது தாயார், ஆன்ட்ஜே ஜெல்லே, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்துவிட்டார்.

இதனால் தனிமரமாக நின்ற மார்கரெதா தனது 18 வயதில், தன்னை விட 20 வயது மூத்த முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை சந்தித்த 6 நாட்களில் நிச்சயதார்த்தம் செய்து ஜூலை 1895 இல் திருமணம் செய்து கொண்டார்.

 


ஆனால் மார்கரெதா எதிர்பார்த்தபடி திருமண வாழ்க்கை அமையவில்லை. தனக்கு பதவி உயர்வு கிடைக்காத விரக்தியில், தினமும் அந்த இராணுவ அதிகாரி மார்கரெதாவை அடித்து உதைத்து வந்துள்ளான். இதற்கிடையில் தீவிரமாக பரவி வந்த மர்மநோயால், மார்கரெதாவின் மகன் விஷம் கொடுத்து கொல்லப்பட்டான். இதனால் 1902 ஆகஸ்ட் 30 அன்று தம்பதியினர் இருவரும் மனம் ஒத்து விவகாரத்து பெற்றனர்.

1903 ஆம் ஆண்டில் பாரிஸுக்கு குடிபெயர்ந்த மார்கரெதா, அங்கு மாதா ஹரி என்கிற பெயரில், தான் ஒரு இந்திய வம்சாவளி பெண் என கூறி நடன கலைஞராக பணம் சம்பாதிக்க போராடினார். 1904-ல் தனது வித்யாசமான கவர்ச்சி நடனத்தின் மூலம் நகரம் முழுவதும் மார்கரெதா பிரபலமடைந்தார்.

நடனமாடிக்கொண்டே ஆடைகளை  களைந்தெறியும் அவரது ஆட்டம், அனைத்து நாடுகளுக்கும் பரவ துவங்கியது.

அவர் பிரபுக்கள், இராஜதந்திரிகள், நிதியாளர்கள், உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பணக்கார தொழிலதிபர்களுடன் தொடர்பில் இருந்தார். 1914-ல் முதலாம் உலகப் போரின்போது, அவரால் சுதந்திரமாக நாடுகளின் எல்லைகளை கடந்து செல்ல முடிந்தது. இது ஒருபுறம் இருந்தாலும், உடல் எடை அதிகமானதால் மார்கரெதாவின் நடனம் புறக்கணிக்கப்பட்டது.

இதனால் பொருளாதார சிக்கலில் தவித்த அவர், விலை மாதுவாக மாறினார். 1915-ல் கெளரவ ஜெர்மன் தூதரான கார்ல் க்ரோமர், மார்கரெதாவை சந்தித்து ஜெர்மனுக்காக உளவு பார்க்குமாறு பணம் கொடுத்துள்ளார். ஆனால் அதனை மார்கரெதா ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

அந்த ஆண்டு டிசம்பரில் நெதர்லாந்தில் இருந்து பிரான்சுக்கு கடல் வழியாகத் திரும்பிய மார்கரெதா, பயணிகளுடன் கைது செய்யப்பட்டு, உளவுத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டுளார். ஆனால் போதுமான ஆதாரங்கள் அவர்களுக்கு  கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

1916 இல் போர் மோசமான நிலையை எட்டியது. இராணுவ இரகசியங்கள் கசிந்துகொன்டே இருந்ததால் 50000க்கும் அதிகமான பிரான்ஸ் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 50000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.


முக்கிய உளவாளியைக் கைது செய்யும் முனைப்பில் தீவிரமாக களமிறங்கிய பிரெஞ்சு அதிகாரிகள், பிப்ரவரி 13, 1917 அன்று, பாரிஸில் உள்ள சாம்ப்ஸ் எலிசீஸில் உள்ள ஹோட்டல் எலிசி அரண்மனையில் வைத்து மாதா ஹரியை கைது செய்தனர். அவர் ஜூலை 24 அன்று விசாரணைக்கு  உட்படுத்தப்பட்ட அவர் மீது பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறை ஜெர்மனிக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி கொடூரமான சிறையில் அடைத்தது. நாட்கள் பல மாதங்களாக நீடித்த பின்னரே வழக்கின் தீவிர  தன்மையை மார்கரெதா உணர்ந்துள்ளார். மூன்று மாதங்களுக்கு  பிறகு கருணை மனு கோரி விண்ணப்பித்தார். ஆனால் அவை நிராகரிக்கப்பட்டு இராணுவ சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டன.

பல்வேறு சித்ரவதைகளுக்கு பிறகுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாத போதும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அக்டோபர் 15, 1917 அன்று விடியற்காலையில் 12 பிரெஞ்சு வீரர்களைக் கொண்ட குழுவால் மார்கரெதாவிற்கு துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த கடைசி நேரம் வரை தன் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளை மார்கரெதா மறுத்ததாகவும், இறப்பதற்கு முன் துப்பாக்கியை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்ததாகவும் நேரில் பார்த்த பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஹென்றி கூறியுள்ளார்.

கனேடிய வரலாற்றாசிரியர் வெஸ்லி வர்க் 2014 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், மாதா ஹரி ஒருபோதும் ஒரு முக்கியமான உளவாளி அல்ல என்றும், பிரெஞ்சு தனது இராணுவத் தோல்விகளுக்கு அவரை பாலிகாடாக்கியதாகவும் குற்றம் சாட்டினார்.


Comments